வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

Friday, June 11, 2010

பூவும் நீரும்

சிவ மாயம்

"அட்ட புட்பம் அவைகொளு மாறுகொண்டு
அட்ட மூர்த்தி அனாதிதன் பாலணைந்து
அட்டு மாறுசெய் கிற்பஅ திகைவீ
ரட்ட னாரடி சேரு மவர்களே "

திருநாவுக்கரசர்

"புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு" என்பது திருமறை. மானிடராகப் பிறந்த ஒவ்வொருவரும் வழிபாடு செய்வது இன்றியமையாதது. வீடுகளில் செய்யப் பெறுவது ஆத்மார்த்த வழிபாடு. திருக்கோயில்களில் நிழ்கத்தப் பெறுவது பிரார்த வழிபாடு. இவ்விரண்டிலும் இறைவன் திருஉருவங்களுக்கு அபிஷேகம், அர்ச்சனை, முதலியன நிகழும். அபிஷேகத்திற்குரிய திரவியங்கள் இவை என்பதையும், அவற்றின் பயன்களையும், அதுபோல மலர்களின் மாட்சியும் அவற்றை இறைவனுக்கு சாத்துவதால் உண்டாகும் நன்மைகளையும் அறிந்துகொள்வது அவசியம். எவ்வித வழிபாடாக இருப்பினும் புறத்தூய்மையும் அகத்தூய்மையும் வேண்டும். புறத்தூய்மை நீரால் அமையும் ஆதலால் வழிபாட்டிற்கு முன்னர் நீராடி, தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து தூயவராக விளங்கவேண்டும். திருநீறு முதலிய சமய அடையாளங்களும் தேவை. ஐம்புலன்களாலும் மனம் சலனமடையாமல் இறை வழிபாட்டில் ஒன்றுதல் வேண்டும்.

திருக்கோயிலுக்குச் செல்லும் போது இறைவழிபாட்டிற்குரிய மலர்கள், அபிஷேகத் திரவியங்கள், தூபம், தீபம், முதலியவற்றிற்கான பொருள்களைக் கொண்டு செல்லவேண்டும். வழிபாட்டிற்குரியனவற்றை இடுப்பிற்க்குக் கீழே இருக்குமாறு எடுத்துச் செல்லக்கூடாது. இரு கைகளாலும் கொண்டுசெல்ல வேண்டும். தூய்மையான இடங்களில் வைக்கவேண்டும்.

அபிஷேகத் திரவியங்கள்:

தூய்மையான ஆற்றுநீர், கிணற்றுநீர், அபிஷேகத்திற்கு முதன்மையானதாகும். "சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்தமே" என்னும் அப்பர் பெருமானின் வாக்கினால் தீர்த்தம் இறைவனோடு தொடர்புடையதாகும். இதனைக் குடங்களில் தூய்மையானவர்கள் சென்று வாத்தியங்கள் முழங்க நாள் தோறும் கொண்டுவரல் வேண்டும்.

கங்கை எல்லா நீர்நிலைகளிலும் விளங்குகிறாள் என்பது மரபு. கொண்டுவந்த திருமஞ்சனத்திற்குரிய நீரில் பாதிரிபூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, முதலிய மணமுள்ள பொருள்களை இடவேண்டும்

"தடங்கொண் டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல் குடங்கொண் டடியார் குளிர்நீர் சுமந்தாட்ட" என்னும் திருஞானசம்பந்தர் வாக்கால் அபிஷேக நீர் இறைவனுக்குக் குளிர்ச்சியுடன் குடங்களில் கொணர்தல் வேண்டும் என்பதை அறியலாம். "போதொடு நீர் சுமந்தேத்த" என்னும் அப்பர் வாக்கால் உரிய காலங்களில் நீர் எடுத்து வரவேண்டும் என்னும் செய்தி தெரிகின்றது. பழைய நீரைப் பயன்படுத்தக் கூடாது.

அபிஷேக முறை:

நல்லெண்ணைய், மாப்பொடி, நெல்லிமுள்ளி, பஞ்சகாவ்யம், பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பின் சாறு, பழவர்க்கம், இளநீர், வாசனைச் சந்தனம், சிருங்கநீர், தாராநீர், ஸ்நபனநீர், சங்காபிஷேகம் ஆகியனவற்றை வரிசையாகச் செய்யவேண்டும். விபூதி, அன்னம், கும்பநீர், அர்க்கிய தீர்த்தம், இவற்றாலும் அபிஷேகம் செய்யவேண்டும்.

சகலாகம சங்கிரகம் என்னும் நூலில் கீழ்க்கண்ட முறை கூறப்பட்டுள்ளது. எண்ணெய், பஞ்சகாவ்யம், மாவு, நெல்லிமுள்ளி, மஞ்சள் பொடி, பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பின் சாறு, பழரசங்கள், இளநீர், அன்னம், சந்தனம், ஸ்நபனநீர்.

பலன்கள்

நன்னீர் ஆட்டினால் நம் விருப்பங்கள் இனிதே நிறைவேறும்: வாசனைத் தைலம் சுகத்தை அளிக்கும்: பஞ்சகாவ்யம் பாவத்தை போக்கும்: பசுவின் பால், தயிர், நெய், நீர், சாணம் இவற்றால் ஆவது பஞ்சகாவ்யம்.

"ஆவினுக்கருங்கலம், அரனஞ்சாடுதல்" பசுவிற்குப் பெருமை. அதன் ஐந்து பொருள்களை இறைவன் திருமஞ்சனத்திற்கு ஏற்றருள்கின்றான். மேலும் திருநாவுக்கரசர்

"பாவ முப்பழி பற்றற வேண்டுவீர்

ஆவில் அஞ்சுகந் தாடும் அவன்கழல்

மேல ராய்மிக வும்மகிழ்ந் துள்குமின்

காவ லாளன் கலந்தருள் செய்யுமே"

என்று கூறுவதால் பாஞ்சகவ்யா அபிஷேகத்தால் பாபம் போகுமென்பது திண்ணம்.

பஞ்சாமிருதம் உடல் திடத்தை நல்கும். யம பயத்தைப் போக்கும் என்பதை திருஞானசம்பந்தர்

"பாலினால் நறுநெய்யால் பழத்தினால் பயின்றாட்டி

நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்

சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டாங் குடியதனுள்

காலினால் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே" என்று திருவாய் மலருகின்றார்.

நெய் அபிஷேகம் செய்தால் மோட்சநிலை கிடைக்கும். பால் நீடித்த ஆயுளையும், சத்வகுணத்தையும் தரும்.

"பாலை யாடுவர் பன்மறை ஓதுவார்

சேலை யாடிய கண்ணுமை பங்கனார்

வேலை யார்விட முண்ட வெண் காடர்க்கு

மாலை யாவது மாண்டவர் அங்கமே"

என்னும் திருநாவுக்கரசர் திருவாக்கில், தேவர்கள் ஆலால நஞ்சால் சாவு நேரும் என அஞ்சியபோது அதனை அமுது செய்து தேவர்களுக்கு நீண்ட வாழ்வு தந்த வரலாறு பேசப்பெறுகின்றது. அப்பெருமான் உகந்தது பாலாகும்.

தயிர் கொண்டு அபிஷேகம் செய்வதால் நன்மைகளைப் பெறலாம். குழந்தைகள் பேரில்லதவர்கள் தயிர் அபிஷேகம் செய்து அக்குறையை நீக்கிக் கொள்ளலாம். மாப்பொடி கடன் தொல்லையை நீக்கி நல்வாழ்வு நல்கும். நெல்லிமுள்ளி அபிஷேகம் உடலிலுள்ள நோய்களைப் போக்கி நல்லுடம்பு தரும். கரும்புச் சாறு கொண்டு திருமஞ்சனம் செய்யின் ஆரோக்கியம் அளிக்கும். தேன் சுகத்தை கொடுக்கும்.

"வான நாடனே வழித்துணை மருந்தே

மாசி லாமணி யேமறைப் பொருளே

ஏன மாஎயி றாமையும் எலும்பும்

ஈடுதாங்கிய மார்புடை யானே

தேனெய் பால் தயிர் ஆட்டுகந் தானே

தேவ னேதிரு வாவடு துறையுள்

ஆனை யே எனை அஞ்சல் என் றருளாய்

ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே"

சுந்தரர்

பழங்களைக் கொண்டு பஞ்சாமிருதம் செய்து அபிஷேகம் செய்யின் செல்வப் பெருக்கு உண்டாகும். வாழைப்பழம் பயிர் வளர்ச்சியையும் மாம்பழம் மக்கட்பேறும் மாதுளை கோபத்தைப் போக்கி சாந்தத்தையும், கௌஞ்சி சோகத்தை நீக்கி இன்பத்தையும், நாரத்தம்பழம் ஒழுக்கத்தையும் நல்கும். எலுமிச்சை யம பயத்தை நீக்கும். சர்க்கரை பகையை அகற்றும். இளநீர் போகங்களைத் தரும். அன்னத்தினால் அபிஷேகம் செய்வது அரச வாழ்வு தரும். சந்தனம் கலந்த நீர் இலட்சுமி கடாக்ஷம் நல்கும். நைவேத்தியம் நிலப் பிரபுத்துவத்தை தரும். தாம்பூலம் சுகத்தையும் சங்காபிஷேகம் புண்ணிய வாழ்வையும் அளிக்கும்.

பஞ்சாமிருதம் இரு வகைப்படும். ரசபஞ்சாமிருதம் - ஏலக்காய் முதலிய வாசனைப் பொருள்களுடன் பால், தயிர், நெய், சர்க்கரை, தேன் சேர்த்துச் செய்யப்படுவது. பழபஞ்சாமிருதம் மேற்கூறிய பொருள்களுடன் வாழை, பலா, மா, முதலிய பழங்களையும் கூட்டிச் செய்யப்பெறுவது.

ஷோடச உபசார முறை:

அபிஷேக முறைகளை பார்த்தோம். பதினாறு வகையான உபசாரங்கள் வழிபாட்டில் செய்யப்பெற வேண்டும்.

தூபம், தீபம், மகாதீபம் (அடுக்குதீபம்), நாகதீபம், விருஷதீபம், புருஷதீபம், பூர்ணகும்பம், ஐந்து பஞ்சதீபம், நட்சதிர தீபம், மேரு தீபம், கற்பூர தீபம், மகாநீராஞ்சனம்.

மகா தீபம் பதினொன்று, ஒன்பது, ஏழு, ஐந்து, முன்று ஒன்று முதலிய அடுக்குகளாக அமைந்திருக்கலாம். பதினாறு அடுக்கு ஏகாதச ருத்திரர்கள், ஒன்பது அடுக்கு - நவசக்தி, ஏழு - சப்தமாத்ரு தேவதைகள், ஐந்து - பஞ்சபிரும்மம், மூன்று - மும்மூர்த்திகள், ஒன்று - சிவன் ஆகிய மூர்த்திகள் அதிதேவதைகள் ஆகும். தூபத்தை மூக்கிற்கு நேரிலும், தீபத்தை கண்களுக்கு எதிரிலும் காட்ட வேண்டும்.



உபசாரமில்லாவிடில் உண்டாகும் தீங்கு:
பூஜை இல்லாவிடின் ரோகமும், புஷ்பமில்லாவிடில் குலநாசமும், சந்தனமில்லாவிடின் குஷ்டரோகமும், ஜலமில்லாவிடில் துக்கமும், தூபமில்லாவிடில் சுகமின்மையும், தீபமில்லாவிடில் பொருள் முட்டுப்பாடும், நைவேத்யமில்லை எனில் வறட்சியும் மந்திரமில்லை எனின் வறுமையும் உண்டாலும்.

ஆடைகள்:
மிருதுவான பட்டு, பஞ்சு ஆகியவற்றால் ஆன வண்ணங்களுடன் கூடிய ஆடைகளை அணிவிக்க வேண்டும். ஆடை சாத்துவதால் சிவலோக வாழ்வு கிட்டும்.

சந்தனம்:
அகர், சந்தனம், கோஷ்டம், குங்குமப்பூ, கற்பூரம் இவைகளூடன் பன்னீர் கலந்த சந்தனம் சாத்த வேண்டும்.

ஆபரணங்கள்:
ஞாயிற்றுக்கிழமை மாணிக்க ஆபரணமும், திங்களன்று முத்துமாலையும், செவ்வாயன்று பவள வடமும், புதன் மரகத ஆபரணமும், வியாழன் புஷ்பராக அணியும், வெள்ளி வைர ஆபரணமும், சனி இந்திரநீல அணியும் அணிவிப்பது விஷேசம். எல்லா ஆபரணங்களையும் எல்லா நாட்களிலும் சாத்தலாம். ஆனால் மேலே கூறிய கிழமைகள் சிறப்பானவை.

மலர்கள்:
இறைவன் திருமுடியில் ஒருபோதும் மலர் இல்லாமல் இருக்கக்கூடாது.

காலை நேரத்தில் தாமரை, புரசம்பூ, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம் (,தாழை - இம்மலர் சிவவழிபாட்டில் பயன்படுத்தலாகாதது.) ஆகிய பத்துவித மலர்களால் வழிபட வேண்டும்.

நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ் ஆகியன நன்மை தரும்.

மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியன உகந்தன.

அஷ்ட புஷ்பங்கள்:
அறுகு, சண்பகம், புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, தும்பை ஆகிய எட்டுமாம்.

உபயோகிக்க நாட்கள்:
தாமரை ஐந்து நாட்களுக்குள்ளும், அரளி மூன்று நாட்களுக்குள்ளும், வில்வம் ஆறு மாதத்திற்குள்ளும், துளசி மூன்று மாதத்திற்குள்ளும், தாழம்பூ ஐந்து நாட்களுக்குள்ளும், நெய்தல் மூன்று நாட்களுக்குள்ளும், சண்பகம் ஒரே நாளுக்குள்ளும், விஷ்ணுகிரந்தி மூன்று நாட்களுக்குள்ளும், விளாமிச்சை எப்போதும் பயன்படுத்தலாம்.

கையிற்கொண்டு வந்தது, தானாக விழுந்தது, காய்ந்தது, முகர்ந்துபார்க்கப்பட்டது, அசுத்தமான இடம், பொருள்களில் வைக்கப்பட்டது ஆகியன பூஜைக்கு ஆகாதனவாம். மலர்களைக் கிள்ளிச் சாத்தக்கூடாது (முழு மலராகவே சாத்த வேண்டும்). இலைகளைக் கிள்ளிச் சாத்தலாம். வில்வம், துளசி முதலியவற்றைத் தளமாகச் சாத்தவேண்டும்.

பூஜைக்குரிய இலைகள் (பத்திரங்கள்):
துளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மருக்கொழுந்து, மருதாணி, தர்ப்பம், அறுகு, அசிவல்லி, நாயுறுவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி முதலியவற்றின் இலைகள் பூஜைக்குரியன.

தேவர்களுக்கு ஆகாத மலர்கள்:
அட்சதை, வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதாம். செம்பரத்தை, தாழம்பூ, குந்தம், கேசரம், குடஜம், ஜபாபுஷ்பம் இவை சிவனுக்கு ஆகாதன. அறுகு, வெள்ளெருக்கு, மந்தாரம் இவை அம்மைக்கு ஆகாதன. வில்வம் சூரியனுக்கு கூடாது. துளசி விநாயகருக்குக் கூடாது.

மூன்று தளங்களை உடைய வில்வம் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்கள், சோம, சூரிய, அக்னி ஆகிய முக்கண்கள் மும்மூர்த்திகள் ஆகிய தன்மைகள் பெற்றன. மூன்று ஜன்மாக்களில் செய்த பாபத்தைப் போக்கும். மூன்று தளங்களும் இச்சை, ஞானம், கிரியை என்ற மூன்று சக்திகளின் வடிவம்.

பஞ்ச வில்வங்கள்:
முல்லை, கிளுவை, நெச்சி, வில்வம், விளா ஆகியன.

இறைவனுக்கு எல்லாவற்றையும் அர்ப்பணித்து வழிபடாமல் உண்பவன் பொருள் நாசத்தை அடையும். எனவே உகந்தனவற்றை நைவேத்யம் செய்ய வேண்டும்.

இத்தொகுப்பில் கண்ட செய்திகள் சிவாகமங்களில் கூறப்பெற்றவை. எனவே கூடுமானவரை விதிகளை உணர்ந்து தவறாது அபிஷேகம், அர்ச்சனை முதலிய வழிபாடுகளைச் செய்து நல்லன எல்லாம் பெருக.

"வாசநலஞ் செய்திமையோர் நாடோறு மலர்தூவ
ஈசனெம் பெருமானா ரினிதாக வுறையுமிடம்
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளு மொழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே".
- திருஞானசம்பந்தர்.

திருச்சிற்றம்பலம்
(மதுரை பன்னிரு திருமுறை மன்றத்தின் பூவும் நீரும் என்ற வெளியீட்டைத் தழுவியது.)

Tuesday, June 8, 2010

தினம் ஒரு தியானம்

பகவத் கீதை

எவன் ஒருவன் என்னிடத்தில் மனத்தை வைத்து உயர்ந்த சிரத்தையுடன் என்னை உபாசிக்கின்றானோ, அவனே யோகத்தில் சிறந்தவன்.

எவன் ஒருவன் விஷயங்களில் பற்று வைக்காது, கருமத்தில் கருத்து வைக்காது, எண்ணங்களை விட்டோழிக்கிறானோ அப்பொழுதுதான் அவன் 'யோகாருடன்' (யோகத்தை அடைந்தவன்) எனப்படுகிறான்.

தனஞ்ஜயா யோகத்தில் நிலைபெற்று, பற்றற்று, வெற்றி தோல்விகளைச் சமமாக கொண்டு கர்மம் செய்.

சம புத்தியுடையவன் இவ்வாழ்க்கையில் புண்ணியம் பாவம் இரண்டையும் விடுகிறான்.

மனிதன் எவ்வாறு நைந்த உடைகளை எறிந்துவிட்டு புதிய உடையை அணிகிறானோ அதேபோல ஆன்மாவானது ஒரு உடலை விட்டு வேறொன்றை எடுத்துக் கொள்கிறது.

எப்படி தீயானது புகையால் மறைக்கப்படுகிறதோ, எப்படி கண்ணாடி அழுக்கால் மறைக்கப்படுகிறதோ, எப்படி கருவானது கருப்பையினால் மறைக்கப்படுகிறதோ, அப்படியே காமத்தால் ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறது.

என்னிடத்திலேயே மனதை நிறுத்து: என்னிடத்தில் புத்தியை வைத்திடு, அதன் பின் என்னிடத்திலே உறைவாய், ஐயமில்லை.

உடம்பு உண்டாவதற்கு காரணமாகிய சத்வம், ராஜசம், தாமசம் இம்மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, இறப்பு, மூப்பு, ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜீவன் மரணமிலா பேரானதத்தைப் பெறுகிறான்.

என்னிடம் அடைக்கலம் புகுந்து கர்மபலன் முழுவதையும் எனக்கே அர்ப்பணம் செய்.

சஞ்சல மனத்தை அடக்கி ஆத்மாவிடம் நிலைநிறுத்திவைக்க வேண்டும்.

தமோ குணம் மேலெழும் போது அவிவேகம், முயற்சியின்மை, மதிமயக்கம், கவனமின்மை, ஆகியவை உண்டாகிறது.

இறுதி காலத்தில் எந்தப் பொருளை நினைத்தவாறு ஒருவன் உடம்பை விடுகின்றானோ, எப்போதும் அந்தப் பொருளையே நினைக்கின்ற அவன் அந்த பொருளையே அடைகிறான்.

உயிர்கள் அனைத்தின் நிலையான பிறப்பிடம் நான் என்று அறிந்துகொள். நான் அறிவாளிகளில் அறிவாகவும் மேலோரில் மேன்மையாகவும் இருக்கிறேன்.

மண்ணில் நறுமனமாகவும் தீயில் தேஜஸாகவும் இருக்கிறேன். உயிரினங்களில் வாழ்க்கையாகவும், தபஸ்விகளின் தவமாகவும் நானே இருக்கிறேன்.

Thursday, June 3, 2010

தினம் ஒரு தியானம்

தினம் ஒரு தியானம்
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்

ஒன்றே குளம் ஒருவனே தேவன்

தண்ணீர் ஒன்றே, அதையே 'ஜலம்' என்று இந்துக்களும், 'வாட்டர்' என்று ஆங்கிலேயர்களும், 'பானி' என்று முகம்மதியர்களும் அழைக்கிறார்கள். அவ்வாறே இறைவனைச் சிலர் 'அல்லா' என்கிறார்கள், சிலர் 'பிரம்மம்' என்கிறார்கள், சிலர் 'காட்' என்கிறார்கள், சிலர் காளி, இராமர், ஹரி, ஏசு, துர்க்கை, என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

உள்ளம் உருகு


ஹரி நாமத்தையோ இராம நாமத்தையோ ஒருமுறை சொன்ன அளவிலேயே ஒருவனுக்கு மயிர்கூச்சம் ஏற்படுமானால், ஆனதக் கண்ணீர் வழியுமானால், அவன் அதன்பிறகு சந்தியா வந்தனம் முதலியவற்றைச் செய்யத் தேவையில்லை.

உருவமும் அருவமும்
உனக்கு அருவத்தில் நம்பிக்கை. அது நல்லது. ஆனால் அது ஒன்றுதான் உண்மை, மற்றவை பொய் என்ற என்னத்திற்கு இடம் கொடுக்காதே, அருவமும் உண்மை, அதுபோல உருவமும் உண்மை. இதை நினைவில் வைத்திரு. உனக்கு எதில் நம்பிக்கையோ அதைப் பிடித்துக்கொள்.

பிரம்ம தரிசனம்
சமாதி நிலையில் பிரம்ம ஞானம் ஏற்படுகிறது. பிரம்ம தரிசனம் கிடைக்கிறது. அந்த நிலையில் சிந்தனை முற்றிலுமாக நின்று விடுகிறது. மனிதன் மௌனி யாகிவிடுகிறான். கடலின் ஆழத்தை அளக்கச் சென்ற உப்பு பொம்மை மீண்டும் வந்து கடலின் ஆழத்தைச் சொல்ல முடுயுமா?.

பக்திக்கான வழி

விவேகம், வைராக்கியம். சாது சங்கம், சாது சேவை, ஈஸ்வர நாம சங்கீர்த்தனம், சத்தியம், முதலிய நற்குணங்களின் மூலமாக பக்தி பொங்கித் ததும்பும். பக்தி எவனிடம் பொங்கித் ததும்புகிறதோ, அவனுக்கு இறைதரிசனம் விரைவில் கிட்டும்.

ஜெகத்குரு

ஈஸ்வரன் ஒருவனே அனைவருக்கும் ஜகத் குருவாகவும் வழிகாட்டியாகவும் உள்ளான். குவானவர் மேன்மை பொருந்திய கங்கை நதிக்குச் சமமானவர். எவ்வளவுதான் குப்பை கூளங்களை எறிந்து குரு என்னும் கங்கையை அசுத்தம் செய்ய முயன்றாலும் அதன் பவித்ரம் ஒருபோதும் குறைவதில்லை.


நேரம் பொன் போன்றது

நீங்கள் விரும்புவது எது? சந்தனத்தின் பரிமளமான நறுமணமா? மலத்தின் கெட்ட நாற்றமா? உங்களுக்கு வேண்டியது அமைதியா, துயரமா? எது வேண்டும் என்பதை நிச்சயப்படுத்துங்கள், காலம் வேகமாய் ஓடும் ஓர் ஆற்றைப் போலச் சென்று கொண்டே இருக்கிறது. கடந்த நாளை எண்ணிக்கதருவதால் பயனில்லை. கணப்பொழுதையும் வீணாக்காமல் நிகழ் காலத்தைச் சிறந்த முறையில் பயன் படுத்திக் கொள்ளுங்கள். வேறொன்றையும் எண்ணாமல், எப்பொழுதும் இடைவிடாது கடவுளையே எண்ணும் வழியில் மனத்தைப் பழகுங்கள்.


மகா மந்திரம்

எல்லாவற்றையும் துறந்து கடவுளை நம்பி இருங்கள். அவரே உண்மை. மற்ற எல்லாம் நிலையர்றவையே அவரை அறியவில்லை என்றால் மற்ற எல்லாமே வீண்!. இதுதான் மகாமந்திரம்

அகன்காரத்திலிருந்து விடுபடு

'நான் செய்கிறேன்' என்ற அகங்காரத்தை விட்டு விட்டு பற்றின்றி செயல்கள் செய்ய முடியுமானால் மிகவும் நல்லது. பற்றின்றி பணி செய்யுந்தோறும் இறைவனிடம் பக்தியும் அன்பும் உண்டாகிறது. இத்தகைய பணி செய்வதன் மூலம் இறையனுபூதி வாயக்கிறது.

கர்ம யோகம்

கர்மம் பற்றுதலின்றிச் செய்யப்படுமானால் அது பகவானிடம் கொண்டு போய்ச் சேர்க்கும். இகபரங்களில் உண்டாகும் வெறுப்பு விருப்பு கொள்ளாமல் செய்யப்படும் கர்மம் முடிவில் இறைவனிடம் சேர்க்கும்


சிக்கல் சம்சாரம்

இறைவனிடம் பக்தி ஏற்படாமல், இல்லறத்தில் ஈடுபாடு கொண்டால் மேலும் மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்வாய். ஆபத்து, துன்பம், கவலை இவை எல்லாம் வந்து மோதும் போது மன உறுதியை இழப்பாய் உலகியல் விஷயங்களில் மனம் செல்கின்ற அளவுக்கு பற்றும் அதிகரிக்கும். ஆதலால், மனத்தை இறைவனிடம் வை.

Tuesday, June 1, 2010

மருத்துவ துறையில் சில கருப்பு ஆடுகள்

மருத்துவ துறையில் சில கருப்பு ஆடுகள்

இன்றைய காலக்கட்டத்தில் எதிலும் கலப்படம் என்பது அதிகம் ஆகிவிட்டது. இது மருத்துவத் துறையையும் விட்டு வைக்கவில்லை. இன்றைக்கு ஏழைகளின் உயிரோடு போலி மருந்து வியாபாரிகள் விளையாடுவது மிகவும் பரிதாபமாக உள்ளது. ஒரு சிலர் சீக்கிரமாக பணக்காரர்கள் ஆக வேண்டும் என்று தவறான வழிகளில் சென்று பணம் சம்பாதிக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு ஒரு சில போலி மருந்து வியாபாரிகளை கைது செய்து இருக்கிறது. இவர்கள் கடந்த சில வருடங்களாகவே போலி மருந்து விற்பனையில் கொடி கட்டி பறந்துள்ளார்கள் . இவர்களின் வருமானம் கோடிகளில் இருந்துள்ளது.
தமிழ்நாட்டில் எத்தனையோ ஏழை மக்கள் போலி மருந்தை உட்கொண்டு இறந்துள்ளார்கள். இன்றைய இந்தியாவில் பொய் சொல்பவர்களுக்கும், ஏமாற்றுகாரர்களுக்கும் அரசியல் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. கைதானவர்கள் கூடிய வரைவில் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி மிகவும் சீக்கிரமாக வெளியில் வந்து மீண்டும் இதே தொழிலை செய்ய வாய்ப்பு உள்ளது. ஏழைகளின் உயிரோடு விளையாடும் இவர்களை போன்றவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படவேண்டும். அப்போதுதான் இவர்களின் விளையாட்டுத்தனதால் இறந்தவர்களின் ஆன்மா சந்தியடையும்.

இதே போன்று சில தவறுகள் சில தனியார் மருத்துவமனைகளிலும் நடைபெறுகிறது. ஏழைகளுக்கு சிறந்த மருத்துவம் என்பது இன்றைய காலக்கட்டத்தில் கிடைப்பது இல்லை. அனேக தனியார் மருத்துவமனைகளில் மிக மிக அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். பொது மருத்துவமனைகளிலம் ஒரு சில மருத்துவர்கள் ஏழைகளுக்கு சிறந்த வைத்தியம் பார்ப்பதில்லை. ஏனெனில் அனேக மருத்துவர்கள் சொந்தமாக மருத்துவமனைகளும், கிளீக்குகளும் வைத்து மருத்துவம் பார்ப்பதால் வருமானம் ஒன்றே குறியாக இருக்கிறார்கள்.

மருத்துவம் படிக்கும் இன்றைய இளைஞர்கள் தங்கள் படிப்பை முடித்ததும் கிராமங்களில் ஏழைகளுக்கு சிறந்த மருத்துவம் பார்ப்பதற்கு முன் வரவேண்டும். அப்போதுதான் ஒளிமயமான இந்தியாவை உருவாக்கமுடியும் என்பது நிதர்சனமான உண்மையாகும். மருத்துவ துறையில் உள்ள ஒரு சில கருப்பு ஆடுகளினால் நல்லவர்களின் சேவைக்கும் களங்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.